×

ஐப்பசி மாத பவுர்ணமி தரிசனத்திற்காக சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்: மழை பெய்ததால் 120 பேர் மலையிலேயே தங்க வைப்பு

வத்திராயிருப்பு: ஐப்பசி மாத பவுர்ணமி தரிசனத்திற்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முதல் நாள் மழை பெய்ததால் 120 பேரை மலையிலிருந்து இறங்க விடாமல் கோயில் பகுதியிலேயே பாதுகாப்பாக தங்க வைத்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரியில் உள்ளது சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில். இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் ஆடி பவுர்ணமிக்கு பின் கடந்த அக். 18ம் தேதி பிரதோஷத்தில் இருந்து ஐப்பசி பவுர்ணமியான நேற்று வரை 3 நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கோயில் நிர்வாகம் சார்பில் மாஸ்க் அணிந்து வந்த பக்தர்களுக்கு மட்டும் காய்ச்சல் பரிசோதனை செய்து, கைகளில் கிருமிநாசினி தெளித்து மலையேற அனுமதித்தனர். நேற்று முன்தினம் பிற்பகலில் சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் கோயிலில் இருந்து சுமார் 120 பக்தர்களை கீழே இறங்க விடாமல் கோயில் பகுதியிலே இரவு முழுவதும் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு வழங்கினர். இவர்கள் நேற்றுகாலையில் மலையிலிருந்து இறங்கி வந்தனர். நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி அதிகாலை 4 மணி முதலே மதுரை, கோவை, சேலம், திருச்சி, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர்.

காலை 6.40 மணியளவில் பக்தர்கள் மலையேறி கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்து கேரி பைகள், பிளாஸ்டிக் தாள்களை பறிமுதல் செய்து, துணி பையை வழங்கினர். ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு நேற்றிரவு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Ipasi Month Bounnami , Sathuragiri, devotees
× RELATED ஒடுகத்தூர் பாக்கம் கிராம கைலாயநாதர்...